வணக்கம் தோழர்களே,
முப்பு பற்றிய
இன்னும் ஓர் சித்தர் பாடல் வரிகளை கவனியுங்கள். ஞானம் வேண்டுமானால் வாதம்
கிடைக்கவேண்டும், வாதம் செய்ய நாதம் விந்து வேண்டும், நாதம் விந்து கிடைக்க
முப்பூ என்னும் அப்பு ஆகிய பூதம் வேண்டும்.
(ரச)வாதம் என்றால் தங்கம்
செய்வது என்று மட்டும் அர்த்தம் கிடையாது என்பதை சரியாக உணராதவரை வேதியல்
என கூறப்படும் ரசவாத தத்துவத்தை புரிவது கடினமாகவே இருக்கும்.
பாடல்.
முப்பூ வென்பதிதுகா ணுமிதை
முத்திய தாகவே சத்தியமாய்
அப்புவி நீரை யரிந்தாலேவாதம்
ஆகுமே பாரடி ஞானப்பெண்ணே
நாகமென்றதோர் சரக்கு உப்புநல்ல
நாதாந்த வீரமும் தானுமுப்பு
போகமான ரசமும் உப்புயிது
போக்கோடே இம்மூன்றும் சேர்ந்ததாலே
சத்தியமாகவே முப்பூக் குருவாகும்
சக்தி சரக்கெல்லாம் கட்டிவிடும்
முத்தியதாகவே வேதை யாகுமிது
முக்கிய மாகுமே ஞானப்பெண்ணே
---------------------------------------------------------------------
வாதம்செய்கிறேன் என்றுசொல்லி பணம்
வாகாகத் தானே செலவுசெய்து
பேதக மாகவே பித்தலாட்டம்பண்ணி
பிதற்றித் திரிவா ருலகுதன்னில்
நாதத்தில் வாதமிருக்குதென் றேசொல்லி
நாடியே பெண்ணை துடர்ந்துசென்று
போதமதாகவே நாதம் பிடித்துமே
பொல்லாத புத்தியாய் தானலைந்து
வாதைப்பட்டு அதைதான் முறிந்துகொண்டு
வாகாய் சரக்கில் சுருக்குமிட
போதைமயக்கத்தால் கெட்டலைந்து பின்பு
போக்கோடே செம்பில் கொடுத்தெடுத்து
கரியதாக எடுத்தெரிந்து கெட்டு
கள்ளரைப் போல முழிமுழித்து
துரியமாகவே ஞானம்வந்த் தால்வாதம்
தும்பரமாக வருகு மென்று
----------------------------------------------
நெல்லுப்பயிர்கள் விளையவே தாந்தண்ணீர்
நிச்சய மாகவே பாய்ச்சுகிறீர்
புல்லுமே சேர்ந்து விளைந்ததைபோலவே
புத்தி யுமான ரசவாதம்
நெல்லுக்கிறைத்த நீர் போலாச்சுயிது
நேரான வாதமும் தானாகும்
புல்லுக்கிறைத்த நீர் போலாகும்பாரு
புத்தி யில்லாதோர் வாதிகளே
வாதிக ளென்றுமே பேர்படைத்து ரச
வாதத்தை சுட்டு கரியாக்கி
நீதியில்லாமலே பொய்கள் சொன்னால்கரு
நிலைக்கு மோசொல்லும் ஞானப்பெண்ணே.
என்ன அழகான வரிகள், படிக்கும் போதே மெய் சிலிர்த்து பரமனின் பிரபஞ்ச வித்தையை என்னி மனம் பிதற்றுகிறது.
இதை தான் மாணிக்கவாச நாயனார் சிவபுராணத்தில்
“ஊற்றான உண்ணர் அமுதே உடையானே”
என்றும்
“கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே”
என்றும்
சிவமாகிய அகாரத்தை, விந்தை, சாரத்தை, பழச்சாற்றை, கற்பத்தை, அமுர்தத்தை புகழ்ந்து பாடுகிறார்.
இதையே அபிராமிப்பட்டர் தமது அந்தாதியில் இவ்வாறு பாடுகிறார்
”அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை, செப்புஉரை செய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரிபாதம் என் சென்னியதே. ”
அதை மீண்டும் உணர்த்துகிறார் பாருங்கள்
“கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”
மீண்டும் படுகிறார்
“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே”
பாடல்களில் இருக்கும் பரிபாஷையை புரிவது சற்று கடினமாகவே இருக்கும், அதை புறக்கண்ணால் பார்த்தால் தோன்றாது உண்மை.
இதையே அவ்வை பாட்டி வினாயகர் அகவலில் பாடுகிறார் பாருங்கள்
” குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென “
மேலும்
” அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி “
எந்த பாடல்களையும் மேலோட்டமாக பார்த்தால் அதன் உண்மை புரியாது என்பதை
உணர்ந்து ஆய்வு செய்யின், நாமும் பரம்பொருள் பற்றிய சரியான விளக்கத்தை
உணரமுடியும்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
No comments:
Post a Comment