Friday, November 6, 2015

விண்டவர் கண்டதில்லை சொல்லார் சொல்லார்...

வணக்கம் தோழர்களே, மாணவர்களே..

சித்தர் இலக்கியம் என்பது மிக ஆழமானது, அதை புரிந்து கொள்வது அதைவிட கடினமானது. சித்தர்கள் என்று நாம் கருதும் அகத்தியர் முதல் போகர் வரை தங்களை பதிணென் சித்தர்கள் பட்டியலுள் சேர்க்கவில்லை, அதற்கான சான்றுகள் முன்னமே இங்கு காட்டப்பட்டிருக்கிறது.

சித்தர் பாரம்பரியம் என்பது குரு முறை வம்சமாக வருவது, அதில் பல இரகசியங்கள் செவி மூலமாகவும் பல பாடல்கள் மூலமாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சித்தர்கள் உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்று சிந்தித்தால் அது மிக தவறான பாதைக்கு தான் உங்களை வழி நடத்தும்.

பாடல்கள் பரிபாசையாக இருப்பதன் காரனம் அது தான்.

சமீபகாலமாக முகநூலிள் இந்த பதிவு சுற்றி திரிகிறது, அதாவது பலராமையா என்பவர் எழுதிய நூல் ஒன்றின் பிரதியை போட்டு அதில் அவர் குறிப்பிட்டிருப்பதையும் போட்டு இந்த பதிவுகள் வலம் வருகிறது.

அதாவது முப்பு என்பது தொடர்பாக பலராமையா கூறியதும் அது தொடர்பாக அகத்தியர் கூறியதும் என்று அதில் பதிவாகி உள்ளது.

முப்பை கண்டவன் பேசமாட்டான் என்று அதன் சாரம் இருக்கிறது..

சிந்தனைக்கு தெளிவு வேண்டும் இல்லையேல் இப்படித்தான் இதன் புரிதல் தவறாக இருக்கும்.

விண்டதில்லை கண்டவர்கள் சொல்லார் சொல்லார் என்கிறார் அகத்தியர்.. அப்படியானால் அத்தனை ஆயிரம் நூல்களை அகத்தியர் செய்திருக்கிறார் அவற்றில் முப்புவை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று முப்புக்கு குரு நூல் எழுதியிருக்கிறார் அகத்தியர்..

விண்டதில்லை கண்டவர்கள் என்றால் அகத்தியர் ஏன் இத்தனை நூல்களை முப்பு பற்றி எழுதினார்..! ஏன் இன்று நீங்கள் சித்தர்கள் என்று பட்டியலிடும் பலரும் முப்புக்கு குரு செய்திருக்கிறார்கள் தானே...!

விண்டவர்கள் கண்டதில்லை.... சொல்லார் சொல்லார் என்றால் இந்த முப்பு தொடர்பாக சித்தர்கள் செய்த நூல்கள் அனைத்தும் பொய்யானவை என்று அல்லவா அர்த்தம் வருகிறது..

அவர்கள் முப்புவை கண்டிருந்தால் சொல்லார்கள்... காணவில்லை சொன்னார்கள்.. ஆகவே அவகள் சொன்னது பொய்யானது என்று தானே எடுக்கவேண்டும்.

பலராமையா ஏன் பொய் என்று தெரிந்து அவர் காலத்தை வீணடித்தார் என்று தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது..!
அது மட்டும் அல்லாம இவர் ஏன் பொய்யானவைகளை பற்றி நூல் செய்தார்.. !

அகத்தியருக்கு முப்பு தெரியாது என்று அகத்தியரே சொல்கிறார்... அது தானே பலராமையாவில் எழுத்தின் விளக்கம்.. விண்டவர்கள் கண்டதில்லை சொல்லார் சொல்லார்..

பாடல்கள் பரிபாசையை அவர் புரிந்து கொண்டது அவ்வளவுதான் அதனால் தான் அவரால் முப்புவை முடிக்க முடியாது போனது போல்..!

காரணம் முப்பு என்பது முடிப்பதல்ல.., முடிந்தே கிடப்பது, ஆனால் முடிக்க வேண்டுவது, முடித்தால் முடியாதது..!

இங்கு குருவுக்கும் முப்புக்கும் இருக்கும் வேறு பாடுகள் கூட தெளிவாக புரியாமல் பல ஆசிரியர்கள் செய்த நூல்கள் இந்த நிலைக்கு காரணம்..

உலகுக்கு சொல்வது என்பது வேறு மாணவனுக்கு சொல்வது என்பது வேறு.. ஒருவருக்கும் சொல்லார்கள் என்றால் அகத்தியருக்கு சொன்னது யார்..! உங்கள் பலராமையாவுக்கு சொன்னது யார்..! சொல்லவில்லை என்றால் அந்த அறிவு எங்கிருந்து வந்தது பலராமையாவுக்கு..!

சாரி கட்டுவது எப்படி என்று இன்று பல பெண்களுக்கு தெரியாது ஆனால் அதை வைத்து சாரி கட்டமுடியாது என்று எப்படி கூறுவது..! இப்படி மட்டுமே சாரி கட்ட வேண்டும் என்றும் கூற முடியாது அல்லவா..! சிந்திக்க வேண்டும்.,,

ஒருவர் செய்த ஆய்வுகள் மட்டுமே உண்மையை கூறுவதாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள்..

பலராமையா இப்போது இல்லை, இருந்திருந்தால் அவருக்கு இதை கடிதமாகவே எழுதியிருக்கலாம், ஆனால் அவரின் பெயரில் பற்றுதல் இல்லாமலும் இல்லை.. அவர் ஓர் சிறந்த ஆய்வாளர் நல்ல மனிதர், மருத்துவர்... அதற்காக அவரின் ஆய்வுகள் மட்டுமே உண்மையானது என்று கூறவும் முடியாது அல்லவா..

இன்று நாம் பல மாணவர்களுக்கு கற்பிக்கின்றோம், அதில் எமது வழிமுறைகள் இருக்கிறது நாளை அவர்கள் தங்களுக்கான ஆய்வுகள் செய்யும் போது எமது ஆய்வுகளில் இருக்கும் தவறுகளை கண்டறிந்தால் அது அவர்களின் சிறப்பான ஆய்வுகளை வெளிப்படுத்தும்..

இது ஓர் தொடர்கதையாக இருப்பது காரணம் இலக்கியம் என்றால் அது தானே... !

சித்தர்கள் கூறியதாக கிடைக்கும் நூல்கள் உலகுக்கு என்று சில, மாணவர்களுக்கு என்று பல, இதில் இருக்கும் வேறுபாடுகளை முதலிள் தெரிய வேண்டும்.

தனித்துவமாக மாணவர்களுக்கு கூறியவைகள் இன்று நம் கைகளில் இருக்கும் போது அதன் செவி மூலமாக கொடுக்கப்பட்ட அறிவு என்ன என்று தெரியாது அல்லவா.. ஆகவே தெளிவான பார்வை சித்தர் இலக்கியதில் இருக்க வேண்டும்.

கடவுள் வேறு கடவுள் நம்பிக்கை வேறு என்ற பரிணாமத்தை வைத்துக் கொண்டு சித்தர்களின் ஆய்வுகள் பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஆன்மீகம் என்ற மாயைக்குல் சித்தர்களை வைத்துக்கொண்டு அவர்கள் கூறியவை பற்றி பேசினால் பலராமையா அல்ல, வேறு எவறாலும் முப்பை ஆய்வு செய்து வெற்றிகான முடியாது..

தங்கம் செய்வது இரசவாதம் இல்லை என்றும், இரசவாத என்றால் இது தான் என்றும் எமது இரசவாத மாணவர்களுக்கு மிக தெளிவாக தெரியும்.., குரு முடிப்பது வேறு, முப்பு என்பது வேறு.., முப்பு குரு என்பது வேறு.. இதற்கிடையில் இருக்கும் வேறுபாடுகளை தெளிவாக முதலிள் ஆய்வு செய்யுங்கள்..

“ அறியாத வாதிகள்தான் சாத்திரத்தை
ஆராயா மற்றானும் கேட்டுசுட்டு
பிறிவாக நான்கெட்டேன் என்பார்கோடி
பிரட்டுத்தான் சாத்திரமும் என்பார்கோடி
நெறியாக பூசிப்பார் கோடிபேர்கள்
நிர்மூட தனம்செய்வார் கோடிபேர்கள்
*** அறிவாலே அறிந்தாக் காலிந்தநூலை
அடைவாகவே தேனும் கிடைக்கும்பாரு”

பார்க்கிற பார்வை தெளிவானதாக இருக்க வேண்டும், மாயையை நீக்கி பார்த்தால் எல்லாம் புரியும்.

முப்பை பற்றி முன்னரே பல விளக்கங்கள் நாம் எழுதியிருக்கிறோம், அவை எமது ஆய்வுகளின் படி...

உங்கள் ஆய்வுகள் உங்களை மேன்மைப்படுத்தும், இருக்கிறதா இல்லையா என்று மற்றவர் சொவதை விடுத்து நீங்கள் தேடுங்கள். எப்ப பார்த்தாலும் சாமியார் சொல்வது தான், குறி சொன்னா சரியாத்தான் இருக்கும், தாடியுடன் காவிகட்டியவன் சொன்னா உண்மைதான் போன்ற மூடத்தனத்தை விட்டு உங்கள் அறிவை வைத்து சிந்தியுங்கள்..

” பலிக்குமே அறிவுடையோன் செய்துகொள்ளும் பாங்கான வேதைமுகங் கோடாகோடி
ஜொலிக்குமே பிரணவத்தால் மூலிகட்டும் சோராமல் சரக்கெல்லாம் சுருண்டுமாளும்
ஒலிக்குமே லோகமெலாம் ஒன்றாய்க்கூடி வுத்தமனே வாதத்துக் குறுதியாச்சு
சலியாத சரக்கெல்லாம் ஐந்தைந்தாக சட்டமுடன் செய்வார்க்கு வாதமாமே”

” வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே”

சிந்தியுங்கள்..

தென்னாடுடைய சிவனே போற்றி..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்