Wednesday, September 24, 2014

எது நவராத்திரி


வணக்கம் மாணவர்களே/தோழர்களே,

நவராத்திரி பற்றி பலர் எம்மிடம் தொடர்சியாக கேட்டிருக்கிறீர்கள், அதன் வெளிப்பாடாக இந்த பதிவு..

நவம் என்றால் ஒன்பது, இராத்திரி என்றால் சூரியன் ஒதுங்கிய பொழுது என்றும் கருத்தாக இருக்கிறது....

எமது ஆய்வுகள் எப்போதும் உங்களுக்கு மகிழ்சியான கதைகளை கூறுவதில்லை என்பதால் இதையும் சற்று ஆச்சரியத்துடன் தான் பார்க்க வேண்டி இருக்கும்…

நவராத்திரி பற்றி சமயம் கூறுவது..

“மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் இவை இரண்டையும் சேர்த்த கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான். இதுவே இந்த படைப்பிற்கு அவன் எடுத்த கால அளவு ஒன்பதாக கூறப்படுகிறது.
இச்சை = விருப்பம் அல்லது ஆசை,
ஞானம் =அறிவு அல்லது தெளிவு,
கிரியா = செய்தல் அல்லது ஆக்கல் என பிரிக்கப்படுகிறது..

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் காலம்.
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்.

இப்படி சிவ ஆகமங்கள் கூறுகின்றன்… இது பலருக்கும் தெரிந்த விடயமாக இருக்கும் என நினைக்கிறேன்..

இதன் பின்னர்.. விஜயதசமி..

” நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.”
இந்த இட்த்தில் தான் எமது ஆய்வுகள் ஆரம்பித்தன..
இறைவன் படைத்தலை விரும்பியதன் காரணமாக ஏற்பட்ட சக்திகள் என்று கூறும் ஆகமங்கள் ஒருபுரம், மகிடனை அழித்து ஆயுதங்களை பூசித்த நாள் என மறுபுரம்…,
இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்கள்,, ஒன்றாக எப்படி சேர்க்கப்படும்..

***இதை நாம் ஆராய தொடங்கினோம்,,, சுமார் 15 வருடங்கள் முன்னர் செய்த ஆய்வு என்பதால் சில குறிப்புக்கள் எமக்கும் மறந்து போயின.. இருப்பினும் இயன்றவரை ஞாபகப்படுத்தி பார்கிறேன்..***

இந்த குழப்பங்களை நமது சித்தர்களிடம் ஆராய முயன்றேன்.. பல ஆச்சரியங்கள் திடுக்கிடும் உண்மைகள் தெளிவாகின.. அன்றில் இருந்து நவராத்திரி என்ற ஒன்றை நாம் செய்வதே இல்லை..
ஆனால் நீங்கள் செய்ய வேண்டும்,, அல்லாது போனால் உணமை புரியாது..

சித்தர்கள் இதை நவகும்ப பூசை என்பார்கள். இது சக்திகளாக பிரிந்த சிவத்தை குறித்து செய்யும் பூசை முறை, ஆனால் இன்று இது சக்திக்குறியதாக மாறிவிட்டது..

இங்கு சக்திகளாக பிரிந்த ஒன்பது விடயங்கள் இங்கு பலவாக இரகசியமாக காட்டப்பட்டிருக்கிறது.. அதாவது நீங்கள் நவக்கிரகமாக வணங்குவதும் இந்த சக்திகளைத் தான்.. நவ துவாரங்களாக உடலில் இருப்பதும் இவைதான்.. நவபாசாணமாக இங்கு பிரிந்து கிடப்பதும் இந்த சக்திகள் தான்..

என்ன செய்வது இங்கு ஆன்மீக ஆராய்சியாலர்கள் மந்திரங்களை உருவாக்க தெரிந்தளவுக்கு உண்மையை தெளியும் அறிவில்லாமல் போய்விட்டார்கள்..

இறைவன் பஞ்சபூத சக்தி என்பதை பல முறை இங்கு கூறியிருக்கிறேன் அல்லவா.. அந்த பஞ்சபூத சக்திகள் பிரிந்தும் ஒடுங்கியும் இருக்கும் நிலைதான் இந்த நவசக்திகள்..
இலகுவாக உங்களுக்கு புரியவேண்டுமானால்.. மூன்று சக்திகள் கொண்ட பூசைக்கு எதற்கு ஒன்பது நாட்கள்.. அல்லது ஒரு நாள் பூசையில் குறித்த சக்தியை வழிபடமுடியாதா.. எதற்கு ஒவ்வொன்றுக்கும் மூன்று நாள் என்ற சிறு சிந்தனை இருந்தால் போதும். உங்களுக்கு தெளிவு கிடைக்கும்..

ஆகவே இங்கு மூன்று சக்திகள் என்ற பெயரில் மறைவாக இருப்பது ஒன்பது சக்திகள்.. இவை ஒன்பதும் குறித்த ஒன்றில் இருந்து பிரிந்த சக்தி அந்த ஒன்றை ஆதியானது என்பார்கள் சித்தர்கள்.. இதனால் தான் சக்தியாகிய பெண்ணை நவக்கிரக நாயகி என்று மறைப்பாக கூறினார்கள்..

ஆக மொத்தமாக பத்து சக்திகள் இதை பிரித்து ஒன்றாகவும் பலவாகவும் மறைத்தார்கள் சான்றோர்கள்..

இதை தமிழில் சிவயநம என பஞ்சாட்சரம் ஆக மறைத்தார்கள்.. அதில் உயிரும் மெய்யும் சேந்து பத்து சக்திகளை வைத்தார்கள்.. அதிலும் ஒன்று மூலமான சக்தி என்பதை காட்டுவதற்கு இகாரத்தை பதித்தனர்..

இ + ச் = சி
அ + வ் = வ
அ + ய் = ய
அ + ந் = ந
அ + ம் = ம

தமிழில் உயிர் எழுத்துக்கள் அகரம் எனவும், மெய் எழுத்துக்கள் உகரம் எனவும், உயிர்மெய் எழுத்துக்கள் இகரம் எனவும் அமைத்தனர்..

அதனால் சிவயநம என்பதில் பதினைந்து அட்சரங்கள் இருக்கும், அதில் ஐந்து வெளிப்படையாகவும் பத்து மறைப்பாகவும் இருக்கும், அதிலும் ஒன்று மட்டும் இகார வரிசையை மறைப்பாக காட்டி முன் நிற்க மற்ற அனைத்தும் அகரவரிசையில் காட்டியிருப்பர் சான்றோர்கள்..

இதனால் தான் பஞ்சாட்சரம் பல வடிவுகளில் எழுதப்பட்டு பல இயந்திரங்கள் அமைக்கப்பட்டாலும் அதன் மூலம் மட்டும் மாறுவதில்லை.. அதனால் தான் பஞ்சாட்சரத்தை அல்லது சிவன் ஐந்தெழுத்தை தமிழை தவிற வேறு எந்த மொழியிலும் எழுதவும் முடியாது..

ஆகவே படைப்பின் காரணமாகவும், படைப்புக்கு காரணமகவும் தோன்றிய சக்திகள் ஒன்பதாக பிரிக்கப்பட்டு அவை கடவுளின் அந்தரங்கமாக நவகிரகமாகவும், நவதுவாரமாகவும், நவசக்தியாகவும் தோன்றின..

ஆனால் இங்கு இன்று சான்றோரின் ஆற்றல்கள் மறைக்கப்பட்டு தமிழ் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுவிட்டது..
சமயத்தை ஆய்வு செய்ய வந்தவர்கள் சாமியாராகவும், சில இடங்களில் கடவுளாகவும் மாறி விட்டார்கள்.. சாமி யாரு என்று தேடி அவன் சாமியாகிவிட்டான்..

இதனால் தான்

”ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க”

“ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐபுலக் கதவை அடைப்பதுவும் காட்டி”

”மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை”

இதனால் தான் சான்றோர்கள் தமிழ் இலக்கங்களில் இகாரத்தை சேர்க்கவில்லை.. ஏன் எனில் இகாரத்தை அளவிட முடியாது என்பது அவர்களின் தெளிவாக இருந்தது,..
அப்படியே சித்தர்களும் அகார, உகார, மகார, சிகார, வகார தீட்சைகள் சொன்னார்கள் ஆனால் இகார தீட்சை பற்றியோ அல்லது இகார மருந்துகளோ சொல்ல வில்லை..

எட்டும் இரண்டும் என்று பேசிய சித்தர்கள் அகரத்தை சிவம் எனவும் உகரத்தை சக்தி எனவும் கூறுவர் மகரத்தை சிவசக்தி என்பர் ஆனால் இகரம் பற்றி பேசவில்லை..

அளவிட முடியாத ஒன்றை எப்படி பேசுவது என்ற தெளிவு ஞானம் அவர்களுக்கு இருந்தது.

சித்தர்கள் தங்களை சிவம் என்பர், சதாசிவன் என்பர், சிவசக்தி சொரூபம் என்பர், முறையாக கற்பங்கள் உண்டால் அவனே சிவன் போல் சதாகோடி காலம் இருப்பன் என்பர்.. ஆனால் அவனும் இறப்பன் என்பர்.. அதிலும் இகாரத்தை வைத்தனர்.

சரி.. இதுவரை பேசியது நவராத்திரி என்பது மூன்று சக்திகளின் செயற்பாடுகள் இல்லை என்பதை காட்டவும், விசய தசமி என்பது ஆயுதம் தொடர்பான ஒன்றும் அல்ல. என்பதை காட்டவும்…

இங்கு இதற்கு சான்றாக ஓர் உதாரணமும் காட்டமுடியும்.. விசய தசமி போரின் வெற்றியை கொண்டாடுவதானால் ஏன், குழந்தைகளுக்கு கற்றலை, எழுதுதலை ஆரம்பிக்கும் நாளாக நமது சான்றோர்கள் அமைத்திருந்தனர்.. !

அதாவது ஓர் ஆரம்பம் இது என்பதை காட்டுவதற்கு மறைப்பாக வைத்தார்கள்..இறைவன் எழுத ஆரம்பித்த நாள் இது அதனால் இதில் குழந்தையும் எழுத ஆரம்பித்தால் அதுவும் சிறப்பாக எழுதும் என்ற அறிவின் நிமித்தம். ஆனால் இது இன்று சம்பிரதாயமாக மாறிவிட்டது…

ஆகவே நவராத்திரி என்றால் ஒளி அற்ற ஒன்பது என்று அர்த்தம்..
ஒளியை படைத்தால் அனைத்தும் தானாகவே படைக்கப்படும் (உற்பத்தியாகும்) என்பது தெளிவு..

அதுபோல் மகா சங்காரம் அல்லது மகா பிரளையம் என்றால் அது இருட்டு என்று அர்த்தம், இந்த இருட்டின் பின் அதற்கு வெளிச்சம் கொடுக்க சூரியனுக்கு ஒளி கொடுக்கப்படும், அவன் மூலம் இங்கு உயிர்ப்பு ஆரம்பமாகும்..

இதைத்தான் இன்று விஞ்ஞானம் “ பிக்பாங்” எனற முறையில் உறுதிசெய்கிறது..

நீங்கள் மிக தெளிவாக சிந்திக்க வேண்டும்.. பிரளையம், யுக முடிவு என்றால் இந்த பூலோகத்தை அழிப்பது என்று அர்த்தம் கிடையாது, அது கடவுளுக்கு தேவையானதும் இல்லை, சூரியனை ஒளி இல்லாமல் செய்தால் போதும்.. இங்கு நாம் இருக்கும் பிரபஞ்சம் இருண்டுவிடும், அதை விடுத்து இந்த சுனாமியும் தேவையில்லை, பூகம்பமும் தேவையில்லை, தீவிரவாதமும் தேவையில்லை..

தச அவதாரம் என்ற போரில் பூமியை வைத்து விளையாட்டுக் காட்டும் கதைகள் கடவுளுக்கு தேவையல்ல..

அத்துடன் அவர் இங்கு வந்து தான் அதை சாதிக்க வேண்டும் என்றால் அவர் கடவுளும் இல்லை..

சரி விடயத்துக்கு வருவோம்.. ஆகவே நவராத்திரி என்பது துற்கை இலக்குமி சரஸ்வதி என்ற மூன்று சக்திகளாக பிரிக்கப்பட்ட அம்சங்களுக்கு உரிய நிகழ்வு இல்லை.

வீட்டில் பொம்மைகளை வாங்கி அடுக்க அர்பர்கள் ஏற்பாடு செய்த ஓர் பண்டிகையகிட்டு..

நவராத்திரி என்பது இந்த படைப்பை ஏற்படுத்திய அதாவது இருளில் இருந்து வெளிவர ஒளியை தந்த சக்திக்கும் அவை ஒன்பதாக விரிந்து குவியும் நவசக்திகளுக்கும் நன்றி சொல்லும் ஓர் நிகழ்வாக இருக்க இதை ஆரம்பித்தனர் சான்றோர்கள்.. அப்படியே இந்த ஒன்பது சக்திகளும் பிரிந்த அந்த சக்தியை வெளிச்சத்தின் முன் வணங்கிய நாள் பத்தாவது நாளாக அமைக்கப்பட்டு. பத்து சக்திகளுக்கும் பத்து நாள் என பிரித்தார்கள்..

இதன் அடிப்படையில் நவசக்திகளையும் கொண்டு இங்கு உற்பத்தியான முதல் தாவர வகைகளாவன நவதானியங்கள் என பெயரிட்டு அவற்றை மீண்டும் இங்கு உற்பத்தி செய்யும் நாளாகவும் அமைத்தனர்.

இப்படி பல விடயங்கள் அடுக்கிக் கொண்டு போகக்கூடியதாக தமிழில் சான்றோர்கள் செய்தனர்..

அப்படியே உயிர்ப்புக்கு இறைவன் கையாண்ட மூலக்கூறுகளை நவபாசாணங்கள் என்று வகைப்படுத்தினர். அப்படியே அவன் எழுதிய எழுத்தை அல்லது சட்டங்களை நவக்கிரகமாக பிரித்தனர், அப்படியே அவன் மனிதனில் சுவாசமாக (சீவனாக) அடங்கும் விரியும் இடங்களை நவதுவாரங்கள் என்றார்கள்..

இதனடிப்படையில் தான் சில சித்தர்கள் நவபாசாணங்களில் சிலைகளை செய்து அவைக்கு உயிர் கொடுக்க முற்பட்டனர்..

ஆனால் அது பரமனின் இரகசியம்.. அது சித்தனுக்கும் இயலாது சித்தன் அப்பனுக்கும் இயலாது என்பதை புரிந்தபின்னரே அவர்கள் கிடைத்த இந்த உயிரையாவது நீண்ட நாள் நோயற்று இருக்க மருந்துகள், ஔட்தங்கள் என தேட ஆரம்பித்து காயகற்பங்களை கண்டறிந்தனர்..

இந்த காயகற்பங்கள் இயற்கையில் இருப்பதனால் தான் இயற்கை காலத்தை கடந்து இருப்பதும் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது.. அதனால் தான் அவர்கள் சிவத்தை அடைவது என்பது காயகற்பம் சாப்பிட்டு யுகங்களை கடந்து இருந்து பிரளையங்களை பார்க்கவும், படைப்பின் இரகசியத்தை அறியவும் முட்பட்டார்கள்..

சித்தர்களை பற்றி முதலில் ஆராய வேண்டும் இந்த சித்தர்களை பற்றி மேடைப்போட்டு புகழ்பாடும் ஆசாமிகள்.. பெயருக்கு முன்னால் சித்தரையும், பின்னால் சுவாமியையும் சேர்ப்பது பெரிதல்ல.. அதற்கு உணக்கு அணுவளவு ஏனும் தகுதி உண்டா என பார்க்க வேண்டும்..

இப்போது உண்மையாக ஓர் தமிழனாக எப்படி நவராத்திரியாகிய, அந்த சக்திகளை வணங்கி நன்றி செய்யலாம் என பார்க்களாம்,..
உங்கள் வீட்டில் பூசை அறையில் வென்மையான துணிவிரித்து அதில் நவதானியங்களை சமமாக சேர்த்து பரப்பி அதன் மேல் ஒன்பது பூரணகும்பம் வைக்க வேண்டும்..

அதாவது மண்ணால் ஆன கலசங்கள் ஒறே அளவானவைகளாக எடுத்து அதற்கு நூல் சுற்றி, அதனுல் நீர் ஊற்றி, அதில் மாவிலைகள் வைத்து, மாவிலைகள் நடுவில் முடியுடன் கூடிய தேங்காய் வைத்து அதற்கு பொட்டு பூ வைத்து.. சலசத்துக்கு வெள்ளை பட்டு சுற்றி.. அதை நடுவில் ஒன்றும் மீதம் சுற்றியும் வைத்து இவை ஒன்பதையும் சுற்றி மீண்டும் வெள்ளை பட்டால் சுற்றி வழிபட வேண்டும்..

இதற்கிடையில் ஓர் மண் பாத்திரத்தில் ஈரமான மண்ணுடன் நவதானியங்களைப் போட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.. இந்த நவதானியம் வளர்க்கும் சட்டிக்கும் நூல் சுற்றி பட்டு சுற்றி பொட்டு பூ வைத்து வெள்ளை சீலையின் மேல், முன்னர் வைத்த ஒன்பது கும்பங்களும் பார்க்குபடி வைக்க வேண்டும்..
இங்கு நூல் சுற்றுவது, நீர் ஊற்றுவது, இலைவைப்பது தேங்காய் வைப்பது ஏன் என்று தெரியாவிடில்.. இதை செய்யாமல் இருப்பது சிறந்தது..

நவதானியங்கள் வளர்க்க நீங்கள் எடுத்த பாத்திரம் தான் பத்தாவது சக்தி.. அதாவது உற்பத்திக்கு காரணமாகிய அந்த சக்தி.. இகாரம் என நாம் கருதுவது..

இப்போது இந்த வழிபாட்டில் நீங்கள் தினமும் சூரிய ஒளி உங்கள் ஊரில் இருக்கும் காலத்தில் மட்டும், இந்த வெளிச்சத்தை தந்த அந்த சக்திக்கு நன்றி செலுத்துவது நவராத்திரி..

இரவில் வழிபட முடியாது, காரணம் நாம் நன்றி சொல்லப் போவது வெளிச்சத்துக்கு.. அதனால் தான் எந்த ஓர் விடயமாக இருந்தாலும் எந்த சமயமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் இங்கு விளக்கு அல்லது ஒளியை முதலில் வைத்தபின்னர் வணக்கம் தொடங்கபடுகிறது..

அந்த ஒளிக்கு காரணமான சக்தியை வணங்குவது தான் நவராத்திரி..

இதற்கு காலம் என்ற ஒன்று தேவையல்ல, எப்போது உங்களுக்கு நன்றி செலுத்தும் வசதி இருக்கிறதோ.. அப்போது செய்யலாம், அதனால் தான் இங்கு சூரிய ஒளி இல்லாத காலமும் தரப்பட்டிருக்கு..

அது போலவே நமது கலாச்சாரத்தில் இறந்தவர் தலையருகில் விளக்கு வைக்கிறோம்.. அதாவது இறப்பு என்பது இருட்டு என்றும் பிறப்பு என்பது வெளிச்சம் என்பதும் இங்கு காட்டப்படுகிறது.. இறந்தவன் வெளிச்சத்தை நோக்கிய முக்தியை அடையட்டும் என்ற அடிப்படையில் சான்றோர்கள் செய்தார்கள்.. அதனால் தான் விதகள் முதல் கருவரை முதல் பிறப்புக்கு முன்னர் இருள் சூழ்ந்திருப்பது சாட்சியாக இருக்கிறது..

எப்படி வணங்குவது என்று கேட்கிறீர்களா..

உங்களுக்கு தெரிந்த மொழியில் உங்கள் நன்றியை மட்டும் சொல்லுங்கள் அதற்கு எந்த மந்திரமும் தேவையில்லை இயந்திரமும் தேவையில்லை, தந்திரமும் இல்லை, அப்படியே நன்றி சொல்ல உங்களுக்கு பிடித்த உணவுகளை தினமும் அவர்களுக்கு அர்பனித்து அதை உங்களைச் சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு உணவாக கொடுங்கள்..

பத்தாவது நாள் உங்களிடம் நன்கு வளர்ந்த தாவரங்கள் பல இருக்கும் அதில் சிலவற்றை தனியாக பிரித்து உங்கள் வசதிக்கேற்ப நடுங்கள்,, அவற்றை பாதுகாத்து அதில் இருந்து ஒரு முறையாவது தானியம் சிலவற்றை பெற்று அதில் உணவு சமைத்து சாப்பிடுங்கள்.. இதுவே கடவுளின் தொழில் எப்படியானது என்பதை உங்களுக்கு உணர்த்தும், அத்துடன் படைப்பின் உண்மையை உணர்ந்து நீங்கள் செய்த நன்றிக்கும், நீங்கள் அந்த தானியங்களை காத்து வளப்பதுக்கும் உறிய பலன் என்ன என்பதை கடவுள் என்ற அந்த சக்தி உங்களுக்கு அடுத்தவருடம் நவராத்திரிக்கும் முன்னர் அடையாளப்படுத்தும்..
நவக்கிரகம் என்ற பேரில் நீங்கள் ஆலயம் போகவும் வேண்டாம், பரிகாரம் செய்யவும் வேண்டாம்.. அவர்கள் யார் என்பது மட்டுமே இங்கு நமக்கு தேவையான அறிவு.. மீதம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..

இப்போது புரிந்திருக்கும் இந்த சாதகம் பார்ப்பது சாதகம் கணிப்பது எங்கிருந்து வந்திருக்கும் என்றும்.. படைப்பின் இரகசியம்.. கடவுளின் சூட்சுமம் அதற்கு அட்டவணை போட்டால், கடவுளுக்கும் போடுபவனுக்கும் என்ன வேறுபாடு.. ஆகவே அந்தக் கணக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்..
இரகசியம் என்றால் அது ஒருவனுக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும்.. ஆனால் இங்கு எல்லாருக்கும் எப்படி தெரிந்தது… 
 

 


 
 
 
 
 
 
 
 
 
 
குறிப்பு..

இது எமது ஆய்வியல் தெளிவு.. யாரையும் இதை பின்பற்றச் சொல்லவில்லை.. முடிந்தால் உங்கள் அறிவை தெளிவடைய செய்து பாருங்கள்.. முடிந்தால் அதன்படி நடவுங்கள்.. இல்லை என்றால் உங்கள் சித்தம்,,..

” ஒருவனென்றே தெய்வத்தை வணங்கவேணும்
உத்தமனாய் பூமிதனில் இருக்கவேணும்
பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்
பாழிலே மனதைவிடான் பரமஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்கள் அப்பனே அனேகங்கோடி
வார்தையினால் பசப்புவார் திருடர்தானே.”

” சத்தியே பராபரமே ஒன்றேதெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
பூதலத்தில் கோடியிலே ஒருவருண்டு
பத்தியினால் மனமடங்கி நிலையில்நிற்பார்
பாழிலே மனதைவிடார் பரமஞானி
சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ்சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந்தானே.”

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

2 comments: